search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிவாரணத் தொகை"

    • மிச்சாங் புயலால் பாதிப்பு அடைந்தவர்களுக்கு ரூ.1,487 கோடி நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது என்றது தமிழக அரசு.
    • நிவாரணம் வழங்கியது தொடர்பான முழு விபரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என்றது.

    சென்னை:

    சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தமிழக அரசு அறிவித்த ரூ.6,000 நிவாரண தொகையை சம்பந்தப்பட்டவர்களின் வங்கிக்கணக்கில் வரவு வைக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

    இந்நிலையில், இந்த வழக்கு ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு சார்பில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களைச் சேர்ந்த 24 லட்சத்து 25 ஆயிரத்து 336 குடும்பங்களுக்கு தலா 6 ஆயிரம் ரூபாய் வீதம் 1,455 கோடியே 20 லட்சம் ரூபாய் நிவாரணம் ஜனவரி மாதமே வழங்கப்பட்டு விட்டது.

    நிவாரண உதவி தேவை என பெறப்பட்ட 5 லட்சத்து 28 ஆயிரத்து 933 விண்ணப்பங்களை பரீசீலித்து சுமார் 53,000 குடும்பங்களுக்கு 31 கோடியே 73 லட்சம் ரூபாய் என விடுபட்ட குடும்பங்களுக்கு நிவாரண தொகை என மொத்தம் 1,487 கோடி ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.

    தொடர்ந்து நிவாரணம் வழங்கப்பட்டது தொடர்பாக முழுமையான விபரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை வரும் 17-ம் தேதிக்கு ஐகோர்ட்டு தள்ளிவைத்தது.

    • எப்போது பார்த்தாலும் இன்னொருவர் போடும் பிச்சையில் நாம் வாழத் தேவையில்லை என்று நிர்மலா சீதாராமன் பேசியுள்ளார்
    • நிர்மலா சீதாராமனின் இந்த கருத்திற்கு அமைச்சர் மனோ தங்கராஜ் கண்டனம் தெரிவித்துள்ளார்

    அரசு வழங்கும் நிவாரணத் தொகையை 'பிச்சை' எனக் குறிப்பிட்டு நிகழ்ச்சி ஒன்றில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

    "வெள்ளம் வந்தால், வீடு இடிந்து விழுந்தால் ₹500, ₹1000 எனத் தருகிறார்கள். இத்தகைய நடவடிக்கையால் நாடு முன்னேறாது. எப்போது பார்த்தாலும் இன்னொருவர் போடும் பிச்சையில் நாம் வாழத் தேவையில்லை" என்று நிர்மலா சீதாராமன் பேசியுள்ளார்.

    நிர்மலா சீதாராமனின் இந்த கருத்திற்கு அமைச்சர் மனோ தங்கராஜ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "பட்டினியை அனுபவித்தவனுக்குதான் பசியின் கொடுமை புரியும். வெயிலின் கொடுமையைப் பார்த்தவனுக்குதான் கூரையின் அருமை தெரியும். மானம் மறைக்க கந்தல் ஆடை இல்லாதவனை இழிவாக பார்ப்பவர்களுக்கு ஏழையின் வறுமை புரியாது. நிர்மலா சீதாராமனின் ஆணவம் ஏழைகளை முன்னேற்றாது. வயிறார உணவு, ஒழுகாத கூரை வீடு, அடிப்படை வசதிகள், கல்வி, சுகாதாரம் போன்றவை அடிப்படை உரிமைகள் என்பதை தத்துவமாக கொண்ட சமதர்ம கொள்கையே திமுகவின் கொள்கை என்று பதிவிட்டுள்ளார்.

    • பொன்னேரி, பூந்தமல்லி மற்றும் ஆவடி ஆகிய 6 தாலுகாக்களில் உள்ள 850 ரேஷன் கடைகளில், 4 லட்சத்து 94 ஆயிரத்து 156 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர்.
    • மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் இறுதிக் கட்ட விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.

    திருவள்ளூர்:

    'மிச்சாங்' புயலால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பெய்த பலத்தமழையால் வெள்ள சேதம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணத்தொகையாக ரூ.6 ஆயிரம் வழங்க அரசு உத்தரவிட்டது.

    திருவள்ளூர் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திருவள்ளூர், ஊத்துக்கோட்டை, கும்மி டிப்பூண்டி, பொன்னேரி, பூந்தமல்லி மற்றும் ஆவடி ஆகிய 6 தாலுகாக்களில் உள்ள 850 ரேஷன் கடைகளில், 4 லட்சத்து 94 ஆயிரத்து 156 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர்.

    இதில், அரிசி கார்டுதாரர்களான 4 லட்சத்து 65 ஆயிரத்து 118 பேருக்கு, ரேசன் கடை ஊழியர்கள் வீடு வீடாகச் சென்று, 'டோக்கன்' வழங்கினர். 4 லட்சத்து 47 ஆயிரத்து 226 ரேஷன் கார்டுதாரர்களுக்கு நிவாரண தொகை ரூ.6 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது.

    மேலும் தொடர்ந்து 3 மாதங்கள் ரேஷன் கடையில் பொருட்கள் வாங்காதோர், வயதானோரின் கைரேகை பதிவாகாததால், பொருட்கள் வாங்க முடியாதவர்களுக்கு, நிவாரணம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. மேலும் பயனாளிகளின் பட்டியலில் பெயர் இல்லாதது உள்ளிட்ட காரணங்களால் நிவாரணத்தொகை கிடைக்காதவர்கள் நிவாரணத் தொகை கேட்டு மனுவாக அளித்தனர். இதில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 6 தாலுக்காக்களில் மொத்தம் 86 ஆயிரத்து 46 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. மனுக்கள் அனைத்தும் அரசு இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. இந்த மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் இறுதிக்கட்ட விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.

    இது குறித்து மாவட்ட வழங்கல் அதிகாரி ஒருவர் கூறும்போது, தகுதி உள்ள மனுக்களின் விண்ணப்பதாரர்களின் வங்கி கணக்கில் வெள்ள நிவாரணத்தொகை ரூ. 6 ஆயிரம் வரவு வைக்க தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

    • 3 மாவட்டங்களிலும் மழை வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டது.
    • நெல்லை மாவட்டத்தில் 3 லட்சத்து 58 ஆயிரத்து 815 ரேஷன் கார்டுகளுக்கு ரூ.6 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

    நெல்லை:

    தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கடந்த 17, 18-ந்தேதிகளில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இதில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டன.

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை கடந்த 21-ந்தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

    அதனைத்தொடர்ந்து நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் அதி கனமழையின் காரணமாக வெள்ளபாதிப்பு ஏற்பட்டுள்ள வட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடும்ப அட்டை அடிப்படையில் நிவாரணமாக ரூ.6 ஆயிரம் வழங்கப்படும் எனவும், லேசான பாதிப்பு உள்ள வட்டங்களுக்கும் மற்றும் குமரி, தென்காசி மாவட்டங்களில் பாதிப்பு காரணமாக அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 வழங்கப் படும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

    இதனையடுத்து மாவட்டங்களில் வெள்ள பாதிப்புகள் கணக்கீடு செய்யப்பட்டு அந்த பணிகள் சுமார் 4 நாட்களில் முற்றிலுமாக முடிக்கப் பட்டது.

    அதன்பின்னர் 3 மாவட்டங்களிலும் மழை வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து வீடுகளை இழந்தவர்கள், பயிர்கள் சேதம், கால்நடைகள் இறப்பு உள்ளிட்டவைகளும் கணக்கீடு செய்யப்பட்டு அவர்களுக்கும் உரிய இழப்பீடு வழங்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் பெருமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட நிவாரணத்தை பொதுமக்களுக்கு வழங்குவதற்கு தாலுகா வாரியாக கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

    அதன் அடிப்படையில் நெல்லை மாவட்டத்தில் 3 லட்சத்து 58 ஆயிரத்து 815 ரேஷன் கார்டுகளுக்கு ரூ.6 ஆயிரம் நிவாரணமும், 1 லட்சத்து 45 ஆயிரத்து 542 ரேஷன் கார்டுகளுக்கு தலா ரூ.ஆயிரமும் நிவாரணமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் அதிகம் பாதிப்புள்ள பகுதிகளில் 508 ரேஷன் கடைகளில் 3 லட்சத்து 21 ஆயிரத்து 53 ரேஷன் கார்டுகள் உள்ளன. குறைந்த பாதிப்புள்ள பகுதிகளில் 449 ரேஷன் கடைகளில் 2 லட்சத்து 13 ஆயிரத்து 614 ரேஷன் கார்டுகளும் உள்ளன. இவர்களுக்கு வீடு வீடாக டோக்கன்கள் வினியோகம் செய்யும் பணி ரேஷன் கடை பணியாளர்களால் மேற்கொள்ளப்பட்டது.

    நேற்று முன்தினம் தொடங்கி இன்று 3-வது நாளாக டோக்கன்களை வீடு வீடாக சென்று ஊழியர்கள் வினியோகம் செய்து வருகின்ற னர். அந்த டோக்கன்களில் நிவாரண தொகை பெறுவ தற்கு நாளை முதல் அதாவது 29-ந்தேதி முதல் தேதிகள் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த நாட்களில் ரேஷன் கடைகளில் சென்று ரொக்கமாக நிவாரண தொகையை பெற்றுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டிருந்தது.

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்றுடன் டோக்கன்கள் வினியோகம் செய்யும் பணி முடிவடையும் நிலையில் நாளை (வெள்ளிக் கிழமை) காலை முதல் பொதுமக்கள் அந்தந்த பகுதிக்குட்பட்ட ரேஷன் கடைகளில் பணத்தை பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்தந்த மாவட்ட நிர்வாகம் சார்பில் கூட்டுறவு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

    அதன்படி ரேஷன் கடைகளில் மக்கள் கூட்டமாக வந்து நெரிசலில் சிக்காமல் இருப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ரேஷன் கடைகளிலும் குறைந்தது 800 முதல் 1200 ரேஷன் கார்டுகள் வரை இருக்கும் என்பதால் ரூ.1000 வழங்கும் கடைகளுக்கு ரூ.10 லட்சம் வரை தேவைப்படும்.

    எனவே கடைகளில் பணம் பாதுகாப்பாக கொண்டு வரப்படுவதையும், விநியோகிக்கப்படுவதையும் கண்காணிக்க போலீஸ் பாதுகாப்பு போடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    தென்காசி உள்ளிட்ட மாவட்டத்தில் இன்று மாலை அனைத்து கூட்டுறவு வங்கி செயலாளர்களுடன், கூட்டுறவு அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடத்துகின்றனர்.

    அதன்முடிவில் எவ்வாறு நிவாரண தொகையை வழங்குவது, கூட்ட நெரிசலை சமாளிப்பது எப்படி என்பது குறித்தும் அறிவுரைகள் வழங்கப் படுகிறது. தொடர்ந்து 3 முதல் 5 நாட்கள் வரை ரேஷன் கடைகளில் இந்த தொகை வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

    • ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவில் சில பகுதிகளிலும் மழை நீர் சூழ்ந்து பொதுமக்கள் தவிக்கும் நிலை ஏற்பட்டது.
    • மூன்று கிராமங்களில் உள்ள அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் அரசின் ரூ.6ஆயிரம் நிவாரண உதவி தொகை வழங்கப்பட உள்ளது.

    காஞ்சிபுரம்:

    மிச்சாங் புயல் காரணமாக பெய்த கனமழையால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. குறிப்பாக குன்றத்தூர் தாலுகாவில் பெரும் பகுதியும் ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவில் சில பகுதிகளிலும் மழை நீர் சூழ்ந்து பொதுமக்கள் தவிக்கும் நிலை ஏற்பட்டது. மாவட்டத்தில் குன்றத்தூர் தாலுகாவில் உள்ள அனைத்து குடும்ப அட்டைகளுக்கும், ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவில் உள்ள மேவலூர் குப்பம், சிவன் தாங்கல், கச்சிப்பட்டு ஆகிய மூன்று கிராமங்களில் உள்ள அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் அரசின் ரூ.6ஆயிரம் நிவாரண உதவி தொகை வழங்கப்பட உள்ளது. அதன்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் 1.37 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரண உதவித் தொகை கிடைக்க இருக்கிறது.

    • விவசாயிகளுக்கு நிவாரணத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என பரமக்குடி எம்.எல்.ஏ. முருகேசன் கூறினார்.
    • அந்தத் திட்டம் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்கப்பட்டு இந்த மாவட்ட மக்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டது.

    பரமக்குடி

    பரமக்குடி எம்.எல்.ஏ. முருகேசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    முன்னாள் தி.மு.க. தலைவர் கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்த போது ரூ.616 கோடியில் ராமநாதபுரம் மாவட்ட மக்களின் குடிநீர் தட்டுப்பாட்டையும், குடிநீர் தாகத்தை தீர்க்க காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டது.

    அந்தத் திட்டம் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்கப்பட்டு இந்த மாவட்ட மக்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டது. தி.முக. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட அந்த காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தால் ராமநாதபுரம் மாவட்ட த்தில் குடிநீர் தட்டுப்பாடே இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

    பரமக்குடியில் முதல் முதலாக அரசு கல்லூரியை ஏற்படுத்தியது தி.மு.க. ஆட்சியில் தான். தொடர்ந்து இந்த மாவட்டத்தின் மீது தனி கவனம் செலுத்தி இந்த மாவட்டத்தையும் மக்களையும் வலம் பெறச் செய்ய வேண்டும் என தி.மு.க. ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.

    தற்போதும் தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

    பருவமழை பெய்யா ததால் ராமநாதபுரம் மாவட்டத்தில் நெல் பயிர்கள் கருகி விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து குழு பார்வையிட்டு சென்று அறிக்கை சமர்ப்பித்துள்ளது. பாதிக்க ப்பட்ட விவசாயிகளுக்கு கண்டிப்பாக நிவாரணத் தொகை வழங்கப்படும். அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இது குறித்து ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் நேரில் சந்தித்து வலியுறுத்தி உள்ளோம். இதுகுறித்து அறிக்கையினை அவர் தமிழக அரசுக்கும் முதல்வருக்கும் அனுப்பி உள்ளார். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணத் தொகை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கண்டிப்பாக நிவாரணத் தொகை வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மேய்ச்சலுக்கு சென்ற மாட்டை புலி தாக்கி கொன்றது.
    • மாட்டின் உரிமையாளருக்கு ரூ.30 ஆயிரத்துக்கான காசோலை வழங்கப்பட்டது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம், கூடலூா் வனக் கோட்டத்தில் உள்ள தேவா்சோலை 3-வது டிவிஷனில் மேய்ச்சலுக்கு சென்ற அம்சா என்பவரது மாட்டை கடந்த 31-ந் தேதி புலி தாக்கி கொன்றது. இதையடுத்து மாவட்ட வன அலுவலர் உத்தரவின்பேரில் மாட்டின் உரிமையாளருக்கு ரூ.30 ஆயிரத்துக்கான காசோலை வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தேவா்சோலை பேரூராட்சித் தலைவா் வள்ளி, துணைத் தலைவா் யூனஸ் பாபு, வனச் சரக அலுவலா் ராஜேந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

    • இறந்தவர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தலா ரூ.5 லட்சம் நிவாரண உதவி தொகை அறிவித்தார்.
    • நிவாரணத் தொகையில் பாதி பணத்தை கேட்ட அமைச்சரை கண்டித்து எதிர்க் கட்சிகள் கண்டனம்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டம் சச்சினபள்ளியை சேர்ந்தவர்கள் அணில், வீர பிரம்மம், கொண்டல் ராவ். இவர்கள் 3 பேரும் கடந்த அக்டோபர் மாதம் 25-ந் தேதி தனியார் ஓட்டல் அருகே உள்ள பாதாள சாக்கடையில் இறங்கி அடைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது விஷவாயு தாக்கி 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

    இறந்தவர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தலா ரூ.5 லட்சம் நிவாரண உதவி தொகை அறிவித்தார்.

    முதலமைச்சர் அறிவித்த நிவாரணத் தொகையை பெறுவதற்காக நீர்வளத்துறை அமைச்சர் அம்பாடி ராம் பாபுவிடம் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் சென்றனர்.

    அப்போது அவர் ரூ 2. 50 லட்சம் கொடுத்தால் தான் காசோலையை தர முடியும் என திருப்பி அனுப்பி உள்ளார்.

    பாதிக்கப்பட்டவர்கள் இது குறித்து அப்பகுதியில் உள்ள ஜனசேனா கட்சி நிர்வாகிகளிடம் தனது மகளுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ள நிலையில் அமைச்சர் காசோலையை தராமல் கமிஷன் கேட்பதாக தெரிவித்தனர்.

    நிவாரணத் தொகையில் பாதி பணத்தை கேட்ட அமைச்சரை கண்டித்து ஜனசேனா கட்சியினர் இன்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் அமைச்சருக்கு கண்டனம் தெரிவித்தனர்.

    ஜெகன்மோகன் ஆட்சியில் இது போன்ற சம்பவங்கள் நடப்பது சாதாரணமாகிவிட்டது.

    ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினர் தங்களை திருத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

    ×